Monday, 23 October 2017

(அன்பே சிவம் ) மனதில் கட்டிய ஒரு சிவாலயம்

மனதில் கட்டிய ஒரு சிவாலயம்
விசுவநாதபுரம் ஒரு சிறிய கிராமம். இங்கு காசிநாதன் என்ற ஏழை விவசாயி வாழ்ந்து வந்தார். தீவிர சிவபக்தரான அவருக்கு, ஒரு சமயம் ஏதோ பிரச்னை வந்தது. அதனால் ஒரு ஜோதிடரிடம் தன் ஜாதகத்தைக் கொடுத்து பலன் கேட்க நினைத்தார். இதற்காக அருகிலுள்ள விசாலாட்சிபுரம் கிராமத்திற்குஒரு பவுர்ணமியன்று ஜோதிடரை தேடிச் சென்றார்அந்த ஜோதிடர் தெய்வபக்தி உள்ளவர், நல்லவர், ஒழுக்கமானவர், நேர்மையான முறையில் பலன் சொல்பவர், அவர் சொன்னது அப்படியே பலிக்கும்'' என்று மக்களிடம்பெயர் பெற்றிருந்தார்.காசிநாதன் ஜோதிடரைச் சந்தித்தபோது மாலை மணி நான்கு.ஜோதிடர் விவசாயியின் ஜாதகத்தைக் கையில் வாங்கினார். ஜாதகத்தைப் பார்த்த உடனேயே அவருக்கு, "இந்த விவசாயிக்கு இன்று இரவு ஏழு மணிக்கு ஒரு கண்டம் இருக்கிறது. இன்றைய தினமே அவர் இறந்துவிடுவார்'என்று புரிந்தது. அது அவருக்கு வருத்தம் தந்தது. அதை விவசாயியிடம் நேரில் எப்படி சொல்வது? அது அநாகரீகம் அல்லவா!' என்று எண்ணினார் ஜோதிடர். எனவே, ஜாதகம் பார்ப்பதைத் தவிர்க்க, ஏதோ ஒரு சாக்குபோக்கு சொல்ல முடிவு செய்தார். அவர் விவசாயியிடம் கனிவுடன், "ஐயா! நீங்கள் இன்று ஆர்வத்துடன் என்னிடம் பலன் கேட்பதற்கு வந்திருக்கிறீர்கள். ஆனால், எனக்கு இன்றைய தினம் ஓர் அவசர வேலை இருக்கிறது. இப்போது தான் அது என் நினைவுக்கு வந்தது. இப்போது உடனடியாக நான் அந்த வேலையைக் கவனித்தாக வேண்டும். எனவே இன்றைய தினம் உங்கள் ஜாதகம் என்னிடம் இருக்கட்டும். நீங்கள் நாளை காலை 11 மணிக்கு என்னை வந்து பாருங்கள். அப்போது பலன் சொல்கிறேன்,'' என்றார்.விவசாயியும் ஒப்புக்கொண்டு ஊருக்கு புறப்பட்டார்.ஜோதிடர் இருந்த கிராமத்திற்கும், விவசாயியின் கிராமத்திற்கும் இடையில் ஒரு சிறிய காடு இருந்தது. அதைக் கடந்து தான் விவசாயி ஊருக்குசென்றாக வேண்டும். அவர் காட்டுக்குள் நுழைந்த சிறிது நேரத்தில், மழை தூறியது. சிறிது நேரத்தில் பெருமழை பெய்ய ஆரம்பித்தது. மழைக்கு ஒதுங்க அவர் இடம் தேடி ஓடினார். சற்று தூரத்தில், பாழடைந்த ஒரு சிவாலயம் இருப்பது தென்பட்டது. அங்கு சென்று ஒதுங்கினார். மண்டபத்தில் நின்ற அவர் சுற்றும் முற்றும் கோவிலைப் பார்த்தார். கோவில் மிகவும் பாழடைந்திருந்தது. ஆங்காங்கே புதர் மண்டிக் கிடந்தது. கருவறையாவது சரியாக இருந்ததாஎன்றால் அதுவும்இல்லை. சிவபக்தரான அவர், கோவில் இருந்த நிலையைப்பார்த்து மனம் வருந்தினார். "இந்தக் கோவில் இப்படி பாழடைந்து காணப்படுகிறதே! என்னிடம் போதிய பணவசதி இருந்தால், இந்தக் கோவிலை மிகவும் நன்றாகப் புதுப்பித்து கும்பாபிஷேகமும் செய்திருப்பேனே'என்று எண்ணினார்.ஆனாலும், ஆசை விடவில்லை. பெரிய புராணத்தில் பூசலார் நாயனார்மனதிற்குள் கோவில் எழுப்பியது போன்று, தன் மனதால், அந்தக் கோவிலுக்குத் திருப்பணி செய்யஆரம்பித்தார். முதலில், மானசீகமாக அவர் கோவில் முழுவதும் அடர்த்தியாக வளர்ந்திருந்த புதர்களை எல்லாம் நீக்கினார்; சிவன் சன்னிதி, அம்பாள் சன்னிதி, பரிவார தேவதைகளின் சன்னிதி, அர்த்த மண்டபம், மகாமண்டபம், மதில்சுவர் போன்றவற்றை சீரமைத்தார். பிறகு, கருவறையில் சுவாமியையும், அம்பாளையும் பிரதிஷ்டை செய்வது போல் பாவனை செய்தார். மனதாலேயே யாகசாலை அமைத்து, ஹோமங்கள் செய்தார். அந்தணர்கள் கலசங்களுடன் மங்கள வாத்தியங்கள் முழங்க கருவறைக்குள் வந்து குடமுழுக்கு செய்வதையும் மனதில் செய்து முடித்தார். அப்போது மக்கள் வெள்ளம் "சிவ, சிவா!'' என்று முழங்கியதை மானசீகமாகக் கேட்டார். இதை அவர் செய்து முடித்து தற்செயலாக, தான் நின்றுகொண்டிருந்த மண்டபத்தை நிமிர்ந்து பார்த்தார். அங்கு ஒரு கருநாகம் அவரைக்கொத்தும் நிலையில் இருந்தது! பாம்பை பார்த்தாரோ இல்லையோ, ""சிவ, சிவா!'' என்று கூவியபடியே மண்டபத்தை விட்டு வெளியே ஓடினார்.அவர் மண்டபத்தை விட்டு வெளியே வந்த அதே சமயம், மண்டபத்தின்மீது இடி விழுந்து மண்டபம் தரைமட்டமாயிற்று! அப்போது சரியாக இரவு மணி ஏழு.அதன்பிறகு விவசாயி, மேற்கொண்டு தான்செல்ல வேண்டிய காட்டுப்பாதையைக் கடந்து தன் கிராமத்திற்குச் சென்றார். மறுநாள் அவர் ஜோதிடர் குறிப்பிட்டபடி,காலை 11 மணிக்கு விசாலாட்சிபுரம் சென்றார். அங்கு ஜோதிடரைச்சந்தித்தார். விவசாயியைப் பார்த்த ஜோதிடருக்கு ஆச்சரியம் தாங்கமுடியவில்லை. அவர், "நேற்று நாம் இவரது ஜாதகத்தைச் சரியாகப் பார்க்கவில்லையோ!' என்று நினைத்து, துல்லியமாக ஜாதகத்தை ஆராய்ந்தார். அப்போது அவருக்கு,"நேற்றிரவு விவசாயிக்கு ஒருகண்டம் இருந்ததுஎன்பது உண்மைதான். அவர் நேற்றிரவு ஏழு மணிக்கு மரணமடைவார் என்பதும் சரிதான்' என்று புரிந்தது. மேலும் ஜோதிடர், விவசாயி ஜாதகத்தை நன்றாகஆராய்ந்து பார்த்தார். அப்போது அவருக்கு, ""இந்தவிவசாயிக்குக் கண்டம் இருந்ததுஉண்மை, அவர் நேற்றிரவு மரணம்அடைந்திருக்க வேண்டும் என்பதும் உண்மை. ஆனால் இந்த ஆபத்திலிருந்து விவசாயி தப்ப வேண்டுமானால் அவருக்கு ஒரு சிவன் கோவில் கட்டிய புண்ணியம் இருக்க வேண்டும்'' என்பது தெரிய வந்தது. ஜோதிடர் இப்போதுவிவசாயிடம், அவரது ஜாதகம் கூறுவதை உள்ளது உள்ளபடியே கூறினார். நீங்கள் நேற்று எப்படி தப்பினீர்கள்?'' என்று கேட்டார்.அவ்விதம் ஜோதிடர் கூறியதைக் கேட்டவிவசாயி, "நான் நேற்று மழைக்குப் பாழடைந்த ஒரு சிவன் கோவில் மண்டபத்தில் ஒதுங்கினேன். அப்போது மானசீகமாக அந்த சிவன் கோயிலுக்குத் திருப்பணி செய்து, குடமுழுக்கும் செய்தேன்'' என்பது போன்ற விவரங்களைச் சொல்லி முடித்தார்.விவசாயி தனக்கு நேர்ந்த கண்டத்திலிருந்து தப்புவற்கு, வெளிப்படையாக ஒரு சிவன் கோவில் கட்டவில்லை தான். ஆனால், அவர் பக்தி சிரத்தையுடன் மானசீகமாக ஒரு சிவாலயம் அமைத்து, கும்பாபிஷேகம் செய்தார். அதை ஏற்ற சிவபெருமான் - விவசாயி உண்மையாகவே ஒரு கோவில் எழுப்பியதாக ஏற்று அங்கீகரித்தார்.இந்தக் கதையின் கருத்து: மானசீகமாக பக்தியுடன் பக்தர்கள் செய்யும் பூஜை போன்றவற்றை, கருணை வள்ளலான இறைவன் ஏற்று அருள் புரிகிறார்,
படித்ததில் பகிர்ந்தது

Tamizh Seidhii Sangamam channel link

https://youtube.com/@tamizhseidhiisangamam?feature=shared 🙏🏻👆🏻