திருவொற்றியூரில் ,
மாசி பிரமோற்சவத் திருவிழாவினையொட்டி தியாகராஜர் உடனுறை வடிவுடையம்மன் கோயிலில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர்.
திருவொற்றியூர் தியாகராஜர் சுவாமி கோயில் தமிழகத்தின் மிகப் பழமையான கோயில்களில் ஒன்றாக உள்ளது. மாசி பிரமோற்சவத் திருவிழா கடந்த 3 ஆம்தேதி அன்று கொடியேற்றதுடன் தொடங்கியது. 11 நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவினையொட்டி எட்டாம் நாளான இன்று
தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர். காலை 10 மணிக்குத் தொடங்கிய தேரோட்டம் தேரடி, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, தெற்கு,மேற்கு, வடக்கு மாட வீதிகள் வழியாக வலம் வந்த தேர் மீண்டும் பிற்பகல் சுமார் 1 மணியளவில் நிலையினை அடைந்தது. இத்தேரோட்டத்தை திருவொற்றியூர் பகுதி மக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.