( ஓம் ஒவ்வையார் திருவடிகள் போற்றி )
விநாயகரிடம் ஔவையார் என்ன கேட்டார் ?
ஔவையார் சங்க காலத்தில் வாழ்ந்த ஒரு தலைச்சிறந்த புலவர் ஆவார். செழுமையான தமிழ்மொழியும், செங்கோல் மன்னர்களின் நல்லாட்சியும் நிலவியிருந்த பொற்காலம். பக்திக்கு இலக்கணமாய்த் திகழ்ந்தவர், ஔவையார். அவர் விநாயகப் பெருமானிடம் மனமுருகி பாடுகிறார்.
“பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்து உனக்கு நான் தருவேன் கோலம்செய் துங்கக் கரி முகத்துத் தூமணியே! நீ எனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா.”
இந்த நவீன காலத்தில் பெரும்பாலனவர்கள் எப்படி கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறார்கள்? “கடவுளே, நான் உன்னுடைய கோவிலுக்கு வருகிறேன். உனக்கு தேங்காய் உடைக்கிறேன். உண்டியலில் காசு போடுகிறேன். எனக்கு பணம் கொடு, கல்வி கொடு, வேண்டியதைக் கொடு” என்றெல்லாம் வேண்டிக் கொள்கிறார்கள். அது ஒன்றும் பெரிய தப்பு இல்லை. அவர் அவரிடம் என்ன குறையாக உள்ளதோ, அந்த குறையை பூர்த்தி செய்யும்படி இறைவனிடம் கேட்கிறார்கள். அப்படித்தானே? இந்த பௌதிக உலகில், ஏதாவது ஒன்றை தந்தால் தானே நமக்கு வேண்டியது கிடைக்கும்? அதே பாவனையோடு மக்களின் மனம் ஒன்றிவிட்டதால், கடவுளிடமும் அவர்கள் ஏதாவது ஒன்றை தந்தால் தான் தமக்கு வேண்டியது கிடைக்கும் என்ற ஆணித்தரமான நம்பிக்கை மனத்தில் வேரூன்றி விட்டது.
ஔவையாரும் கடவுளிடம் கேட்கிறார். ஆனால் அவர் என்ன கேட்கிறார்? பணமா? பொன்னா? பொருளா? இதெல்லாம் அழியும் இயல்புடையதல்லவா? அல்லது அவர் இறைவனிடம் மோட்சத்தை கேட்டாரா? இல்லை. ஔவையார் கேட்கிறார்..
“இறைவா, உனக்கு நான் பாலும், தெளிந்த தேனும், சர்க்கரைப் பாகும், தானியங்கள் ஆகியவையை கலந்து அளிக்கிறேன். அதற்கு நீ எனக்கு இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்ற முத்தமிழ்களையும் கொடு”.
சங்க காலத்தைச் சேர்ந்த புலவராகிய ஔவையார், கடவுளிடம் தனக்கு முத்தமிழ்களையும் தந்தருள வேண்டுகிறார். கடவுளிடம் செல்வத்தைக் கேட்கலாம், கல்வியைக் கேட்கலாம், வலிமையைக் கேட்கலாம். ஆனால், ஏன் ஒரு புலவர் கடவுளிடம் தமிழைக் கேட்கிறார்? ஔவையார் தமிழ்ப்பற்று மிக்க புலவர், ஆதலால் அவர் இறைவனிடம் தமிழையே கேட்டார் என எடுத்துக் கொள்ளலாம். தலைச்சிறந்த தமிழ்ப் புலவரான ஔவையாருக்கு தன்னுடைய தமிழ்ஞானம் உயிர்மூச்சு உள்ளவரை பெருகிக் கொண்டே இருக்கவேண்டும் என்ற ஓர் அவா இருந்திருக்கலாம். ஆதலால் அவர் சங்கத்தமிழ் மூன்றும் தா என கேட்டிருக்கலாம். ஆனால் ஓர் உண்மையான பக்தை இறைவனிடம் எதையும் எதிர்ப்பார்க்க கூடாது அல்லவா? நான் உனக்கு நான்குவகையான பொருட்களை அளிக்கிறேன், அதற்குப் பதிலாக நீ எனக்கு மூன்று வகையான பொருட்களை அளிக்கவேண்டும் என்று நிபந்தனை இடுவது ஏன்? காரணம் உண்டு!
"இறைவா, எனக்கு முத்தமிழ்களையும் கொடு! உன்னைப் பற்றி இசைவடித்து நான் மனமுருகி பாடவேண்டும். உன்னைப் பற்றி கவிதை வடித்து நான் மனமுருக வேண்டும். உன்னைப் பற்றி நாடகம் அமைத்து நான் உன் புகழையே எண்ணியிருக்க வேண்டும். செழுமையான, மிகச் சுவையான தமிழால் உன்னைப் பாடி, பாடி உருக வேண்டும். நீ எனக்கு தமிழ் என்னும் தேனை அளித்துக் கொண்டேயிரு, என் உயிர் உடலில் தங்கியிருக்கும் வரை தமிழால் உன்னைப் பாடி உருகுகிறேன்”
இதுதான் இப்பாடலின் மெய்யான உட்பொருளாகும். ஆகவே, நாமும் அடுத்த முறை இப்பாடலை பாடும் போது இதன் உட்பொருளை நன்கு அறிந்து, இறைவனிடம் அவனை எப்பொழுதும் மனமுருகி பாட நமக்கு நல்ல சொல்வளம் மற்றும் தமிழ்ஞானம் தந்தருள பிரார்த்தனை செய்வோம்
படித்ததில் பகிர்ந்தது